பிரிட்டனில் உள்ள லிங்கன்ஷையரைச் சேர்ந்த 86 வயதான ராய் மார்ஷ் என்ற முதியவர், தனது வாயில் பலமாக வீசிய காற்றால் நுழைந்த ஒரு இலையைத் துப்பியதற்காக சுமார் ₹30,000 (250 பவுண்டுகள்) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அவர் ஓய்வு எடுப்பதற்காக நின்றபோது இந்தக் கடினமான அபராதத்தை அதிகாரிகள் விதித்துள்ளனர்.

இந்த அபராதத்தால் அதிர்ச்சியடைந்த ராய் மார்ஷ், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக, அந்த அபராதம் ₹18,202 (150 பவுண்டுகளாகக்) குறைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து ராய் மார்ஷின் மகள், ஜேன் மார்ஷ் ஃபிட்ஸ் பட்ரிக் சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்துமா மற்றும் இருதயப் பிரச்சினை உள்ள தனது தந்தை, தொண்டை அடைத்துக் கொண்டதால் இலையைத் துப்பியதாக அவர் கூறியுள்ளார்.

அதிகாரிகள் முதியவர்களை அநாவசியமாக மிரட்டிப் பணம் பறிப்பதாகவும், உண்மையானக் குற்றங்களுக்கு அபராதம் விதிக்காமல், அப்பாவி மக்களைத் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.