
மஹாராஷ்டிரா மாநில மும்பையில் பாந்திரா – ஒர்லி கடல்வழி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் நடுவழியில் வாகனங்களை நிறுத்தவோ, பொது பொதுமக்கள் இறங்கி புகைப்படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் கார் ஒன்று நடுவழியில் நிறுத்தப்பட்டது.
அப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு நபர் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறினார். அவருடன் வந்த 2 பேர் அவரை செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த நபர் தடுப்பு சுவர் மீது ஏறி சாகசம் செய்தார். அதன் பின் அவர்கள் 3 பேரும் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர்.
இதை தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவலை அறிந்த காவல்துறையினர் வீடியோவை வைத்து விசாரணை நடத்திய போது தடுப்பு சுவரில் ஏறி சாகசம் செய்தது இந்தி சினிமா பின்னணி பாடகர் யாசர் தேசாய் என்பது தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாகசம் செய்ததால் காவல்துறையினர் பாடகர் யாசர் தேசாய் மற்றும் வீடியோ எடுத்த 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது