நாடாளுமன்றத்தில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தேசிய அரசியலில் அனல் பறக்கும் விவாதங்கள் தொடங்கிவிட்டன. அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதா வீழ்ந்தது.

இந்நிலையில், “காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானது என்பதை சசி தரூர் என்னிடம் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டார்” என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கொளுத்திப் போட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காங்கிரஸ் பெண்களுக்கு எதிராக இருக்கலாம், ஆனால் என்னை யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்” என்று தரூர் தன்னிடம் விளையாட்டாகக் கூறியதாக ரிஜிஜு தெரிவித்தது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், கிரண் ரிஜிஜுவின் இந்த கருத்தை காங்கிரஸ் எம்பி சசி தரூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மன்னிக்கவும் ரிஜிஜு அவர்களே.. நான் அப்படி எதையும் கூறவில்லை. சோனியா காந்தி போன்ற வலிமையான பெண் தலைவரின் கீழ் இயங்கும் காங்கிரஸ், பெண்களின் உரிமைகளுக்காக எப்போதும் உறுதியாக நிற்கும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுசீரமைப்புடன் இணைக்காமல் இப்போதே அமல்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு புகைப்படத்தில் உள்ள ஏழு சாட்சிகளே இதற்கு அத்தாட்சி என்று தரூர் சவால் விட்டுள்ள நிலையில், பாஜக – காங்கிரஸ் இடையேயான இந்த மோதல் டெல்லி அரசியலில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.