டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆன்லைன் வாயிலாக வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பி அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு, புதன்கிழமை அன்று ஆன்லைன் மூலம் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தது. அப்போது, ‘ஷிட்ஜீத் சிங்’ என்ற பெயரில் லாக்-இன் செய்த மர்ம நபர் ஒருவர், திடீரென தனது திரையைப் பகிர்ந்து ஆபாச வீடியோக்களை ஓடவிட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக ஆன்லைன் இணைப்பைத் துண்டித்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் விசாரணை தொடங்கியபோது, அதே நபர் மீண்டும் ஆபாச வீடியோவை ஒளிபரப்பினார். இதனால் இரண்டாவது முறையாக இணைப்பு துண்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக விசாரணை தொடங்கியபோதும் இதே கூத்து அரங்கேறியது.

அப்போது பின்னணியில் ஒலித்த ஒரு தானியங்கி குரல் “இது அமெரிக்காவிலிருந்து செய்யப்பட்ட ஹேக்கிங். இப்போதே மீட்டிங்கை மூடுங்கள். உங்கள் கணினி ஹேக் செய்யப்பட்டுவிட்டது” என்று எச்சரித்தது. நீதிமன்றத்தின் பாதுகாப்பையும் மாண்பையும் சிதைக்கும் வகையில் நடந்த இந்தத் தொடர் இடையூறுகளால், ஆன்லைன் விசாரணை தற்காலிகமாக முழுமையாக நிறுத்தப்பட்டது. ‘ஸ்ரீதர் சர்னோபட்’ மற்றும் ‘ஷிட்ஜீத் சிங்’ ஆகிய பெயர்களில் இருந்த கணக்குகளில் இருந்து இந்த ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற நிர்வாகம், டெல்லி போலீஸின் ஐ.எஃப்.எஸ்.ஓ (IFSO) பிரிவில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது. இது திட்டமிட்ட ஹேக்கிங் வேலையா அல்லது பாதுகாப்பு குறைபாடா என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.