ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வழக்கறிஞர் குணால் சர்மா தாக்கப்பட்ட விவகாரத்தில், சர்வதேச கின்னார் அகாடா (தெலங்கானா) மகா மண்டலேஸ்வர் மகா காளி நந்தகிரி புதிய விளக்கத்தை அளித்துள்ளார். இந்தச் சம்பவம் திட்டமிட்டு திசைதிருப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதாவது  கடந்த செவ்வாய்க்கிழமை காலை, பனிபார்க் பகுதியில் வழக்கறிஞர் குணால் சர்மாவின் கார் மீது மகா மண்டலேஸ்வரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று மோதியது. இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், வழக்கறிஞர் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் குணால் சர்மா அளித்த புகாரின் பேரில், மகா மண்டலேஸ்வரின் ஆதரவாளர்கள் சிலரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Maa kali nandgiri ( Lady aghori Amma ) (@digambarladyaghorinagasadhvi)

இந்தச் சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள மகா காளி நந்தகிரி, “வாகனம் மோதியவுடன் எனது ஆதரவாளர்கள் மன்னிப்பு கேட்டனர். ஆனால், வழக்கறிஞர் குணால் சர்மா ஆவேசமடைந்து என்னைத் தள்ளிவிட்டார். அவர் என் மீது கை வைத்ததாலேயே எதிர்வினை ஆற்ற வேண்டியிருந்தது. தள்ளுமுள்ளுவின் போது அவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் ஒருதலைப்பட்சமாகச் செய்திகள் பரப்பப்படுவதாகக் கூறிய அவர், சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும் என்றும், விரைவில் தாமாகவே முன்வந்து காவல் நிலையத்தில் விளக்கமளிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். மேலும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் செல்போனைப் பறித்து வீடியோக்களை அழித்ததாகவும் வழக்கறிஞர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், போலீஸார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.