இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்தாவில் உள்ள ஒரு விசித்திரமான மற்றும் அனைவரையும் மிரள வைக்கும் தெருவோர உணவு சந்தையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. வழக்கமாக நமது ஊர்களில் தெருக்களுக்குத் தெரு சிக்கன், மட்டன் மற்றும் சைட் டிஷ் கடைகள் இருப்பது போல, அங்கே கோப்ரா பாம்பின் இறைச்சியால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை விற்கும் கடைகள் வரிசையாக அமைந்துள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த ‘அத்னான் முசாபிர்’ என்ற டிராவல் விலாகர் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, இணையவாசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கூச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வைரல் வீடியோவின்படி, கடைகளில் நூற்றுக்கணக்கான உயிருள்ள பாம்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு எந்தவித ஆபத்துகளும் ஏற்படாமல் இருக்க, அந்தப் பாம்புகளின் வாயில் பிளாஸ்டிக் டேப்புகள் சுற்றப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் வந்து தனக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்தவுடன், அங்கிருக்கும் பெண்கள் மிகவும் கூலாகவும் துரிதமாகவும் அந்தப் பாம்புகளின் தோலுரித்து சமைக்கத் தொடங்குகின்றனர். இந்த விசித்திரமான உணவுக் காட்சியைப் பார்க்கும்போதே பலரின் ரத்தமும் உறைந்து போவது போல உணர்ந்தாலும், உள்ளூர் மக்களுக்கு இது மிகவும் பிடித்தமான மற்றும் வழக்கமான ஒரு உணவுப் பழக்கமாக மாறிவிட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது.
View this post on Instagram
இந்தக் கடைகளில் கோப்ரா பக்கோடாக்கள் மட்டுமல்லாமல், கோப்ரா சூப், கோப்ரா சோசேஜ், சமோசா போன்ற பல்வேறு வகையான ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் மிகவும் மலிவான விலையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அங்குள்ள மக்களிடையே இந்த பாம்பு இறைச்சிக்கு வரலாறு காணாத அளவுக்குக் கடுமையான வரவேற்பும் தேவையும் உள்ளது. பாம்புகளைப் பார்த்தாலே அலறி அடித்து ஓடும் மனிதர்களுக்கு மத்தியில், அவற்றைச் சமைத்து ருசிக்கும் இந்த இந்தோனேசிய மக்களின் வீடியோ இன்டர்நெட் முழுவதும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், லட்சக்கணக்கான பார்வைகளையும் பெற்றுத் தீயாகப் பரவி வருகிறது.
