பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரில் பயணி ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்தபோது, இருக்கையில் நகம் வெட்டியும், குப்பைகளை வீசியும் அசுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பயணி தனது இலக்கை அடைந்து இறங்கிச் செல்ல முயன்றபோது, ஆட்டோ ஓட்டுநர் அவரைத் தடுத்து நிறுத்தி, இருக்கையைச் சரிபார்க்கும்படி அமைதியாகக் கூறியுள்ளார்.

முதலில் லேசாகத் தட்டிவிட்டுச் செல்ல முயன்ற பயணியை மீண்டும் அழைத்த ஓட்டுநர், குப்பைகளை முழுமையாகச் சுத்தம் செய்யும்படி உறுதியாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அந்தப் பயணி எந்த வாக்குவாதமும் செய்யாமல் மீண்டும் வந்து இருக்கையைச் சுத்தம் செய்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது ‘X’ தளத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும், “பயணிகள் பயணத்திற்காக மட்டுமே பணம் செலுத்துகிறார்கள்; வாகனத்தை அசுத்தம் செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை. ஆட்டோ ஓட்டுநரின் வாழ்வாதாரமான வாகனத்தைப் பேணுவதில் அவருக்கும் உரிமை உண்டு” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், “இந்தச் சமூகப் பொறுப்பு இருதரப்புக்கும் இருக்க வேண்டும். ஓட்டுநர்களும் போக்குவரத்து விதிகளை மதித்து, பயணிகளிடம் கனிவாக நடக்க வேண்டும்” என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர். எது எப்படியோ, சண்டையிடாமல் அமைதியான முறையில் ஒருவருக்குச் சமூகப் பொறுப்பைக் கற்றுக்கொடுத்த அந்த ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.