வெயில் கொளுத்த வேண்டிய பங்குனி மாதத்தில், திடீரென சென்னை மற்றும் பெங்களூருவை ஆலங்கட்டி மழை புரட்டிப் போட்டுள்ளது. மெரினா கடல் முதல் தேனி கணவாய் வரை ஐஸ் கட்டிகள் மழையாகக் கொட்டியது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்குப் பின்னால் கோடீஸ்வரர் பில் கேட்ஸின் ‘ரகசிய சோதனை’ இருப்பதாக வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
வளிமண்டலத்தில் சுண்ணாம்புத் துகள்களைத் தூவி சூரிய வெப்பத்தைக் குறைக்கும் SCoPEx திட்டத்தை பில் கேட்ஸ் ஆதரிப்பதாகவும், அதனால்தான் இத்தகைய மேகங்கள் உருவாவதாகவும் ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்தத் தகவல்களில் உண்மை இல்லை என்பதே நிதர்சனம். பில் கேட்ஸ் நிதியுதவி செய்த அந்தத் திட்டம் 2024-லேயே அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டுவிட்டது.
தற்போது பெய்யும் இந்த ஆலங்கட்டி மழைக்கு ‘கான்வெக்டிவ் ரெயின்’ (Convective Rain) என்ற இயற்கை நிகழ்வே காரணம். நிலப்பரப்பின் அதீத வெப்பம் காரணமாகக் காற்று மேலே எழும்பி, ஈரப்பதத்தோடு மோதி இடி மேகங்களை உருவாக்குவதால் தான் இந்த மழை பெய்கிறது. பில் கேட்ஸ் புயலைக் கிளப்பவில்லை, மாறாக நாம் காடுகளை அழித்து உருவாக்கிய பருவநிலை மாற்றத்திற்கு இயற்கை கொடுத்துள்ள ‘அலர்ட்’ தான் இந்த ஆலங்கட்டி மழை.
