தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக வழக்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில், செல்போனை ஆன் செய்தபோது ஞானசேகரன் முதலில் காவல் அதிகாரியிடம் பேசி உள்ளார். அடுத்தது திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் பேசியுள்ளார்.
அந்த சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியிடம் தொடர்பில் உள்ளவர். அப்போது ஏன் அந்த வழக்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியனை விசாரிக்கவில்லை?, காவல் துறையினர் ஞானசேகரன் கைது செய்துவிட்டு உடனடியாக விடுவித்தது ஏன்? என கேட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கும் நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து காவல்துறையினர் மிகச் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டனர். வெறும் 5 மாதத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதியே காவல்துறையினரை பாராட்டியுள்ளார். அதில் அண்ணாமலை கூறியதை நானும் கேட்டேன்.
அவர் நானும் வட்டச் செயலாளர் சண்முகமும், பேசியதாக குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். அதாவது 52 வட்டச் செயலாளர்கள் உள்ளனர். அதில் சண்முகமும் ஒருவர். எனவே ஒரு வட்டச் செயலாளர் மாவட்ட செயலாளரிடம் பேசுவதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா?, இதெல்லாம் ஒரு குற்றமாகுமா?.
தினம்தோறும் 15 பேருக்கு மேல் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். இதற்காக என்னை விசாரிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இது எந்த வகையான குற்றச்சாட்டு என எனக்கே தெரியவில்லை. அவருக்கு தெரியுமா எனவும் தெரியவில்லை இவ்வாறு அவர் கூறினார்.
