2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பல்வேறு அணிகளின் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் காயம் மற்றும் பிற காரணங்களால் வெளியேறி வருவது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஒன்பது முன்னணி வீரர்கள் தொடக்கப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால் அந்தந்த அணிகளின் பலம் சற்றே குறைந்து காணப்படுகிறது.

குறிப்பாகச் சென்னை அணியில் இருந்து நாதன் எல்லிஸ் தொடை தசை காயம் காரணமாக இந்த முழுத் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். அதேபோல் கொல்கத்தா அணியில் ஹர்ஷித் ராணா மற்றும் பதிராணா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதில் ஹர்ஷித் ராணா இந்த ஆண்டு முழு சீசனையும் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.

ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரரான சாம் கரன் காயம் காரணமாக முழுத் தொடரிலிருந்தும் விலகியுள்ள நிலையில் ஐதராபாத் அணியின் ஜாக் எட்வர்ட்ஸும் விலகியுள்ளார். அந்த அணியின் நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ் தொடக்கப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. பஞ்சாப் அணியின் பெர்குசன் மற்றும் டெல்லி அணியின் ஸ்டார்க் ஆகியோரும் ஆரம்பக் கட்டப் போட்டிகளைத் தவறவிடுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடப்புச் சாம்பியனான பெங்களூரு அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயத்திலிருந்து மீண்டு வருவதால் அவரும் தொடக்கப் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விலகி வருவது ஐபிஎல் அணிகளின் திட்டமிடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.