ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சூரத்தைச் சேர்ந்த அமன் வர்மா மற்றும் முகமது தௌஹிதுல் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. இதில் முகமது தௌஹிதுல் என்பவர் தனது அடையாளத்தை மறைத்து ‘ரோகித்’ என்ற பெயரில் பழகியுள்ளார்.
ஜனவரி 1-ஆம் தேதி அமன் தனது பிறந்தநாளைக் கொண்டாட அந்தப் பெண்ணைச் சூரத்திற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற அந்தப் பெண்ணை ஒரு ஹோட்டலில் சிறைபிடித்த இருவரும், அவருக்குத் தொடர்ந்து போதை ஊசிகளைச் செலுத்தி கடந்த 20 நாட்களாகப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி, அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறித்ததோடு, அவரைப் பாலியல் தொழிலில் தள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
கொடிய சித்திரவதைகளுக்கு நடுவே, ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்த அந்தப் பெண், தைரியமாகப் காவல்துறையை அணுகிப் புகார் அளித்தார்.
காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், இருவரையும் கைது செய்தனர். இவர்களை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ள அதிகாரிகள், இந்த கும்பலுக்கு வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
