அமெரிக்காவின் டார்கெட் ஸ்டோரில் திருட முயன்றதாக பிடிபட்ட இந்தியப் பெண்ணின் வீடியோ சமுக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி 15, 2025 அன்று நடந்தது என்றாலும், ஒரு யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட பிறகு இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

போலீஸ் அதிகாரியின் உடல் கேமராவில் பதிவான இந்த வீடியோவில், குற்றச்சாட்டுக்கு ஆளான பெண் கைகூப்பி, அழுது புலம்பியபடி மன்னிப்பு கோருவது தெளிவாக தெரிகிறது. கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் இவர் இதே நிலையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வீடியோ டிக்டாக்கிலும் வைரலானது, இதில் பெண்ணின் உருக்கமான மன்னிப்பு மற்றும் அவரது மன உளைச்சல் பார்ப்பவர்களை உலுக்கியது.

விசாரணையின்போது, பெண்ணிடம் அவரது மொழி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தடுமாற்றத்துடன் தான் குஜராத்தி மொழி பேசுபவர் என்றும், இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். மொழிபெயர்ப்பாளர் தேவையா எனக் கேட்டபோது, அதை மறுத்துவிட்டார். இவரிடம் வாஷிங்டன் மாகாணத்தின் ஓட்டுநர் உரிமம் இருந்தது தெரியவந்தது.

மேலும், இவர் ஏற்கனவே இந்த ஸ்டோரில் திருடியதாகவும், ஆனால் இதுவே முதல் முறையாக பிடிபட்டதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். திருடிய பொருட்களை விற்க திட்டமிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

போலீஸார் அவரை எச்சரித்து விடுவித்தாலும், மீண்டும் ஸ்டோருக்கு வந்தால் அத்துமீறல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் எச்சரித்தனர்.

இதற்கு முன், இதேபோல் இல்லினாய்ஸில் மற்றொரு குஜராத்தி பெண் 1300 டாலர் மதிப்புள்ள பொருட்களை திருட முயன்று பிடிபட்டு, பணம் செலுத்துவதாக கூறிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது