ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி டங்கன் மெக்நாட், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான மேகாலயாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சமூக வலைதளங்களில் இந்தியா தொடர்ந்து தவறான முறையில் சித்தரிக்கப்படுவதாக வேதனையுடன் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். மேகாலயாவில் உள்ள நோங்ஜ்ராங் பள்ளத்தாக்கின் இயற்கை அழகைக் கண்டு வியந்த அவர், “இந்தியா மிகவும் அழகான நாடு; இங்கு இவ்வளவு அழகிய இடங்கள் இருந்தும், சமூக வலைதளங்கள் பெரும்பாலும் சேரிகள் மற்றும் தரமற்ற தெரு உணவுகளை மட்டுமே காண்பித்து, தவறான கண்ணோட்டத்தை உருவாக்குகின்றன” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பாராட்டிய இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, இந்தியா என்பது டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் மட்டுமின்றி, வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதிகளிலும் அற்புதமான அழகு நிறைந்துள்ளது என்றும், இங்குள்ள மக்கள் அதிசயமானவர்களாகவும் நேர்மையாகவும் இருப்பதாகவும் பலர் கருத்துத் தெரிவித்து, மெக்நாட்டின் கருத்தை ஆமோதித்துள்ளனர்.
