ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு ஒரு நிறுவனத்தின் நிறுவனர் கூறிய விசித்திரமான மற்றும் நகைச்சுவையான காரணம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ரெடிட் சமூக வலைதளத்தில் ஒரு பயனர் இ-மெயில் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘இன்று சம்பளம் கிரெடிட் ஆகாது’ என்று கூறியுள்ள நிறுவனர், இதைச் சம்பளத் தாமதம் என்று அழைக்காமல், ‘பொறுமை வளர்க்கும் முயற்சி’ என்று புதுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “வளர்ச்சி என்பது வருவாயில் மட்டும் நடக்காது; அது காத்திருப்பிலும் நடக்கும்” என்றும், “நாம் வெறும் ஸ்டார்ட் அப் மட்டுமல்ல; நாம் ஒரு இயக்கம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான பார்வைகளையும், 2,500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று இந்த இ-மெயில் செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நிறுவனரின் இந்த விசித்திரமான அறிவிப்பைக் கண்ட சமூக வலைதளப் பயனர்கள், கருத்துப் பிரிவில் நகைச்சுவை மழை பொழிந்து வருகின்றனர்.
What is happening?
byu/npatyal inStartUpIndia
ஒரு பயனர், “அடுத்த மாதம் ‘ஃபீச்சர் இன்று டெலிவர் செய்யப்படாது’ என்று நாங்களும் இ-மெயில் அனுப்பலாமே, காத்திருப்பிலும் வளர்ச்சி நடக்குமல்லவா?” என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். இன்னொருவர், “இதை ஊழியர்கள் அனைவரும் ரசிப்பார்கள் என்று நிறுவனர் நினைத்தாரா? நிச்சயம் அனைவரும் சிரித்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிலர், “இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை, வெறும் ஜோக் போலத் தெரிகிறது” என்று சந்தேகம் எழுப்பினாலும், மற்றொரு பயனர், “இதே போன்ற ஒரு மெயில் எனக்கு 5 நாட்களுக்கு முன்பு வந்தது. எனவே, இது உண்மையாக இருக்கலாம்” என்றும் கூறியிருப்பது, நிறுவனக் கலாச்சாரம் குறித்த விவாதத்தை இன்னும் சூடாக்கியுள்ளது.
