ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் ஜகதீஷ், மனைவி ஷாரதா மற்றும் அவர்களது 7 வயது மகன் ஹிமான்ஷு ஆகியோரின் உடல்கள் வெவ்வேறு அறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விசாரணையின்படி, வேலை முடிந்து வீடு திரும்பிய ஜகதீஷ், தனது மனைவி ஷாரதா தூக்கில் தொங்குவதைக் கண்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர், பள்ளிக்குச் சென்று மகன் ஹிமான்ஷுவை வீட்டிற்கு அழைத்து வந்து, முதலில் மகனைக் கொன்றுவிட்டு, பின்னர் மற்றொரு அறையில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக் குறிப்பில், “என் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தத் தவறும் இல்லை… ஹேமுவின் அம்மா (ஷாரதா) முதலில் சென்றுவிட்டார், நாங்கள் செல்வதற்காக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது. இது, மனைவி இறந்த துயரமே தற்கொலைக்குக் காரணம் என்பதைக் காட்டுவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
