தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்டங்களில் முறையாக ஆய்வு செய்யப்படுகிறது.

அரசு பள்ளிகளையும் பள்ளிகள் திறப்புக்கு முன்பாகவே தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பள்ளி திறந்த பிறகு தான் அரசு பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரம் தெரிய வரும். கடந்த 2 வருடங்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு தகுந்தார் போன்று படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.