கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான செல்வசரண் (25) என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவுப் பெண்ணான ரேஷ்மா (20) என்பவருக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடித் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், செல்வசரண் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால், மன உளைச்சலில் இருந்த ரேஷ்மா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

விபரீத முடிவெடுக்கும் முன், ரேஷ்மா ராஜபாளையத்தில் உள்ள தனது தாயாருக்குப் போன் செய்து, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரேஷ்மாவின் தாயார், உடனடியாக நாகர்கோவிலில் உள்ள அவர்களது உறவினர்களுக்குப் போன் மூலம் இதுபற்றிக் கூறியுள்ளார். தகவலறிந்து ரேஷ்மாவின் வீட்டிற்கு விரைந்து வந்த உறவினர்கள், வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு பலமுறை தட்டியும் திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, படுக்கை அறையில் ரேஷ்மா தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, கோட்டார் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான குறுகிய காலமான ஒன்றரை ஆண்டுகளில் இந்தச் சம்பவம் நடந்ததால், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. (RDO) அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.