பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நிறைவடைந்து சில வாரங்கள் கடந்த போதிலும், போட்டியாளர்களிடையே ஏற்பட்டுள்ள வார்த்தை போர் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடிகை சான்ட்ரா அமி மற்றும் நடனக் கலைஞர் ரம்யா ஜோ ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் தற்போது முற்றிப்போயுள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சான்ட்ரா அளிக்கும் பேட்டிகளில், ஒரு சில போட்டியாளர்களைத் தவிர மற்றவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளைப் பகிர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ரம்யா ஜோ, சான்ட்ரா மற்றும் அவரது கணவர் பிரஜின் ஆகியோரைச் சாடும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

சான்ட்ராவின் பேட்டிகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள ரம்யா ஜோ, தன்னிடம் பிரஜின் அனுப்பிய சில குரல் பதிவுகள் ஆதாரமாக உள்ளதாகவும், தேவைப்பட்டால் அவற்றை வெளியிடத் தயங்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், சான்ட்ராவை நடிப்பு அரக்கி என விமர்சிக்கும் ரசிகர்களின் பதிவுகளையும் அவர் பகிர்ந்து வருவதால் இந்த மோதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள், வெளியே வந்த பிறகும் தொடர்வது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்ளும் இந்த போக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதே தற்போது பிக் பாஸ் பார்வையாளர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.