மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஆதித்யன், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பிரேமாவை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்த ஆதித்யன், கடந்த சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து தொலைபேசியில் பேசியுள்ளார்.
ஆதித்யன் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருவதுடன், வேலைக்குக் கூடச் செல்லாமல் அந்தப் பெண்ணுடன் பேசுவதைத் தெரிந்துகொண்ட பிரேமா, இதுகுறித்துத் தன் கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது ஆதித்யன், “நான் யார் கூட வேண்டுமானாலும் பேசுவேன், நீ அதைக் கேட்கிற வேலையை வைத்துக் கொள்ளாதே” என்று பிரேமாவை அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கணவர் தனக்குத் துரோகம் செய்வதாகக் கருதி பிரேமா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஆதித்யன் வீட்டில் இருந்து டீசலை எடுத்து மனைவி பிரேமா மீது ஊற்றிக் கொளுத்தி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பிரேமா அலறிச் சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு எழுபது சதவிகித காயங்களுடன் பிரேமாவிற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்துத் தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற குத்தாலம் காவல்துறையினர், பிரேமா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆதித்யனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கணவரே மனைவியின் மீது டீசல் ஊற்றிக் கொளுத்திய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
