மருத்துவ உலகில் ஒரு மாபெரும் புரட்சியாக, பிறப்பிலேயே கர்ப்பப்பை இல்லாத பெண் ஒருவர், தானமாகப் பெறப்பட்ட கருப்பை மூலம் ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் பிரித்தானியாவில் நடந்துள்ளது.

‘எம்.ஆர்.கே.எச்’ (MRKH) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கிரேஸ் பெல் என்ற பெண்ணுக்கு, 16 வயதிலேயே உங்களால் ஒருபோதும் தாயாக முடியாது என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

ஆனால், மனம் தளராத அவர், கடந்த 2024 ஜூன் மாதம் சுமார் 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இறந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட கருப்பையைத் தனது உடலில் பொருத்தி சாதனை படைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஐவிஎஃப் (IVF) முறையில் கருத்தரித்த அவர், தற்போது 3.09 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

தங்களுக்கு உதவிய மருத்துவக் குழுவினரை கௌரவிக்கும் விதமாக, தனது மகனுக்கு ‘ஹியூகோ ரிச்சர்ட்’ எனப் பெயரிட்டு மகிழ்ந்துள்ளார் அந்தத் தாய். இயற்கையாகக் கருப்பை இல்லாத ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த ‘மிிராக்கிள் பேபி’ ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.