ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாகிஸ்தானுக்கு, இந்தியப் பிரதிநிதி அனுபமா சிங் மரண அடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தொடர்ந்து பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்கள் இப்போது ‘பொறாமை துர்நாற்றம்’ வீசுவதாக அவர் சாடியது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

1947-லேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்துவிட்டது, அது பிரிக்க முடியாத பகுதி என்று முழங்கிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என எச்சரித்தார்.

குறிப்பாக, பாகிஸ்தானின் பொருளாதார நிலையை நக்கலடித்த அனுபமா சிங், “பாகிஸ்தான் சர்வதேச நிதியத்திடம் (IMF) பிச்சை கேட்கும் தொகையை விட, எங்கள் ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட் இரண்டு மடங்கு அதிகம்” என்று புள்ளி விவரத்தோடு போட்டுத் தாக்கினார்.

மேலும், செனாப் ரயில் பாலம் போன்ற பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பார்த்து பாகிஸ்தான் மாயத் தோற்றத்தில் இருப்பதாகக் கிண்டலடித்தார்.

சொந்த நாட்டில் ஜனநாயகமே இல்லாத பாகிஸ்தான், மற்றவர்களுக்குப் பாடம் எடுப்பது கேலிக்கூத்து என்றும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை விட்டுவிட்டு உங்கள் நாட்டின் வறுமையைச் சரி செய்யுங்கள் என்றும் அவர் கொடுத்த பதிலடி இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.