குஜராத் மாநிலம் சூரத் நகரின் லிம்பாயத் பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி. இவரது மனைவி இஷ்ரத் ஜஹான். கடந்த ஜனவரி 5-ம் தேதி ஹைதர் அலி உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஹைதர் அலியின் உடலை அவரது சொந்த ஊரான பிஹாரில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் விரும்பினர். ஆனால், மனைவி இஷ்ரத் மட்டும் சூரத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என விடாப்பிடியாக ஒற்றைக் காலில் நின்றார்.
இதனால் சந்தேகமடைந்த ஹைதரின் சகோதரர், மீண்டும் உடற்கூராய்வு (Forensic Post-mortem) செய்யக் கோரினார். அதில், ஹைதர் அலி நெஞ்சு நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
போலீசார் இஷ்ரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர் சொன்ன தகவல்கள் அதிரவைத்தன: மும்பையில் வேலை பார்த்த ஹைதர் அலி, மாதம் ஒருமுறை சூரத் வருவார். அப்போது பாலியல் ஊக்க மருந்துகளை (Sex enhancement pills) உட்கொண்டு, இரவு முழுவதும் மனைவியைச் சித்திரவதை செய்துள்ளார்.
இந்தத் தொல்லை தாங்காமல், ஜனவரி 1-ம் தேதி முதல் கணவனுக்குக் கொடுக்கும் மஞ்சள் பாலில் ‘எலி மருந்தை’ கலந்து கொடுத்துள்ளார். இரண்டு மூன்று நாட்கள் விஷம் கொடுத்தும் அவர் சாகாததால், ஆத்திரமடைந்த இஷ்ரத், தூக்கத்தில் இருந்த கணவனின் கழுத்தை நெரித்தும், மார்பில் ஏறி நின்றும் கொலை செய்துள்ளார்.
