சென்னையில் மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 24 வயதான ரோஷன் நாராயணன் என்ற ஐ.டி. ஊழியர், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரோஷன், பெற்றோர் திருப்பதி சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலையில் அவர்கள் வீடு திரும்பியபோது, மகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் போலீஸார் நடத்திய சோதனையில், ரோஷன் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் சிக்கியது. அதில், “தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஓர் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதாகப்” அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியும் எழுதியிருந்தார். ரோஷன் கடிதத்தில் குறிப்பிட்ட, “காதுக்குள் ஒலி கேட்கும்” இந்த நிலை, செவிப்புல மாயை (Auditory Illusion) அல்லது சில சமயங்களில் ஹாலுசினேஷன் (Hallucination) போன்ற கடுமையான மனநலக் கோளாறின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
இது சிகிச்சை அளிக்கக்கூடியப் பிரச்சினையாக இருக்கலாம் என்பதால், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.
