தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்க விடுதியில் தங்கிப் பயின்று வந்த 14 வயது மாணவர் ஒருவர், அதே விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்கள் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மாணவர்கள் சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், சிகரெட் பிடிக்கச் சொல்லியும் கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவன், தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் அளித்த புகாரின் பேரில் இந்த விவகாரம் காவல் துறைக்குச் சென்றது.
இந்தப் புகாரின் அடிப்படையில் தஞ்சை மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நான்கு மாணவர்களையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். சக மாணவர்களே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
