கர்நாடகா பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகாவில் உள்ள மதினஹள்ளி கிராமத்தில், மாவட்ட கூட்டுறவு வங்கியில் நடந்த தலைவர் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. கடந்த ஒரு வாரமாக மாயமாக இருந்த மாருதி என்பவர், திடீரென இந்தக் கூட்டத்தில் தோன்றினார்.

இதனால் கோபமடைந்த அவரது மனைவி, மந்திரி சதீஸ் ஜார்கிகோளி முன்னிலையில் கணவரின் சட்டையைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் சரமாரியாக அறைந்தார். இதைப் பார்த்து மந்திரி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அங்கிருந்தவர்கள் கணவன்-மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். மாருதியை யாரோ கடத்தியதாகவும், இதுகுறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது, முன்னாள் எம்.பி. ரமேஷ் கத்தி, மந்திரி சதீஸ் ஜார்கிகோளியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து, தனது அரசியல் வாழ்க்கை மீண்டும் புத்துயிர் பெறும் என சவால் விட்டார்.

அவர் போலீசாரின் செயல்பாட்டிலும் அதிருப்தி தெரிவித்தார். இதனால், மந்திரியின் ஆதரவாளர்களுக்கும், ரமேஷ் கத்தியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

பின்னர், போலீசார் தலையிட்டு அவர்களை சமரசம் செய்து கலைத்தனர். இந்த சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.