
சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் கிருஷ்ணகுமார் சுகந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணகுமார் அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். கணவர் மது குடித்துவிட்டு பணம் தராததால் சுகந்தி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். அதே பகுதியில் இருக்கும் பேக்கரி கடையில் சுகந்தி பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 15-ஆம் தேதி வழக்கம் போல மது குடித்துவிட்டு தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணகுமார் காலி சிலிண்டரால் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சுகந்தியின் இடது கண்ணில் படுகாயம் ஏற்பட்டு அவர் வலியில் அலறி துடித்தார். பின்னர் சுகந்தி தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதன் பிறகு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து சுகந்தி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ண குமாரை கைது செய்தனர்.