ஒரு ஊழியர் தனது திருமணத்திற்காக 11 நாட்கள் விடுப்பு கேட்டு, சமூக வலைதளமான ரெடிட்டில் பதிவு செய்த கதை இணையத்தில் பரவி வருகிறது. அவரது திருமணம் நவம்பர் இறுதியில் நடைபெற உள்ளது. திருமணம் மற்றும் தேனிலவு (ஹனிமூன்) காரணமாக டிசம்பரில் 11 வேலை நாட்கள் விடுப்பு தேவைப்படுவதாக முன்கூட்டியே தனது மேலாளரிடமும், குழுவினரிடமும் தெரிவித்தார். அவர் தனது வேலைகளை மற்றவர்கள் பார்த்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார், ஆனால் மேலாளர் “நிறுவன விதிப்படி திருமணத்திற்கு 3 நாட்கள் மட்டுமே விடுப்பு தர முடியும்” என்று மறுத்துவிட்டார், இருப்பினும் அந்த ஊழியருக்கு 28 நாட்கள் விடுப்பு கணக்கில் இருந்தது.
இதனால், ஊழியர் HR துறையை அணுகினார். HR, “உங்களிடம் போதுமான விடுப்பு இருந்தால், மேலாளர் அனுமதித்தால் 11 நாட்களும் தொடர்ச்சியாக எடுக்கலாம்” என்று கூறியது. ஆனால், மேலாளர் மீண்டும் “அப்படியொரு விதி தெரியாது” என்று பதிலளித்தார். ஊழியர், “தேவைப்பட்டால் ஊதியமில்லா விடுப்பு எடுக்கவும் தயார், ஆனால் என் திருமணத்திற்கு இந்த விடுப்பு கண்டிப்பாக வேண்டும்” என்று வலியுறுத்தினார். இப்போது அவர் முறையாக விண்ணப்பிக்க திட்டமிட்டு, “ஒரு மேலாளரின் பிடிவாதத்தால் என் வாழ்க்கையின் முக்கிய தருணத்தை இழக்க முடியாது” என்று கோபத்துடன் கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி, பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து, HR-க்கு மின்னஞ்சல் மூலம் விஷயத்தை தெளிவாக விளக்கி விடுப்பு கேட்க அறிவுறுத்தியுள்ளனர்.
