பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் வெளியிட்ட ஒரு புதிய வீடியோவில், இஸ்ரேலின் 24 வயதான இளைஞர் எவியாதர் டேவிட் மிகுந்த பலவீன நிலையில் தனது சொந்த கல்லறையை தோண்டும் காட்சிகள் பதிவாகி உள்ளன. நிலத்தடியில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் அவர் ஒரு கரண்டியைப் பிடித்து மண்ணை தோண்டும் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கின்றன. “நான் என் சொந்த கல்லறையை தோண்டுகிறேன்… நாள் செல்ல என் உடல் தளர்ந்து வருகிறது…” என்று கூறும் அவரது வார்த்தைகள், அந்த துன்பத்தின் அளவைக் காட்டுகிறது.

இந்த வீடியோ, ஹமாஸ் கடந்த 48 மணி நேரத்தில் வெளியிட்ட இரண்டாவது வீடியோவாகும். அதில், டேவிட் எலும்பு தேய்ந்த நிலையில், மிகவும் பலவீனமாக பேசுகிறார். வீடியோவின் இறுதியில், அவர் கதறி அழுகின்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. அவரது குடும்பம் இந்த வீடியோவுக்கான அனுமதியை வழங்கியுள்ளனர். “எங்கள் மகனை வலுக்கட்டாயமாக சாப்பிடாமல் வைத்து, பிரசார வீடியோவாக பயன்படுத்துவது உலகின் மிகவும் கொடூரமான செயல்” என்று அவரது பெற்றோர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

 

டேவிட், கடந்த அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் மற்றும் பல பாலஸ்தீன அமைப்புகள் இணைந்து இஸ்ரேலில் நடத்திய தாக்குதலின் போது கடத்தப்பட்ட 49 பேரில் ஒருவர். அன்றைய தாக்குதலில் 1,219 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் மேற்கொண்ட பெரும் தாக்குதலில் தற்போது வரை 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, இந்த வீடியோ வெளியானதும் டேவிட் குடும்பத்துடன் பேசினார். அவர் தனது அதிர்ச்சியையும், சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதேநேரத்தில், ஹமாஸ் மற்றும் இசுலாமிக் ஜிகாத் அமைப்புகள், மற்றொரு இளைஞர் ரோம் பிராஸ்லாஃவ்ஸ்கியின் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதிலும் அவர் களைப்பும், சோர்வும் நிறைந்த நிலையில் காணப்படுகிறார். இந்த வீடியோக்கள் இஸ்ரேலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளன. டெல் அவிவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, “உடனடி அரசாங்க நடவடிக்கை வேண்டும்” என கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் மையக் கூட்டமாகும்.