கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் போக்குவரத்துத் தொழில் செய்து வந்த 40 வயது தொழிலதிபர் ஒருவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரத்தப் பரிசோதனை செய்ததில், அவருக்கு எச்.ஐ.வி. (HIV) வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது 38 வயது மனைவி, 17 வயது மகள் (பிளஸ்-2 மாணவி) மற்றும் 9 வயது மகன் ஆகியோருக்கும் எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், மகள் தவிர்த்து, தாய்க்கும், 9 வயது மகனுக்கும் எய்ட்ஸ் நோய் கணவரிடமிருந்து பரவி இருந்தது தெரியவந்தது. இதனால், அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியான வாழ்க்கை ஒரே நாளில் பேரிடியாக மாறியது.

தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாகக் கருதிக் கலங்கிய அந்தத் தாய், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் மகளுக்கும் நோய் தொற்று பரவி விடுமோ? என்று அஞ்சியுள்ளார்.

மேலும், தானும் மகனும் இதேபோல் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதைத் தாங்க முடியாத நிலையில், எய்ட்ஸ் நோய் பாதித்த மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் (நவம்பர் 8) இரவு, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகனின் முகத்தில் தலையணையால் அழுத்தி மூச்சுத்திணறச் செய்து கொன்றுள்ளார்.

மகன் இறந்துவிட்டதை உறுதிசெய்த பின்னர், மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் எழுந்த மகள், தாயும் தம்பியும் இறந்து கிடந்ததைப் பார்த்துக் கதறியதால், அக்கம்பக்கத்தினர் சிப்காட் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஓசூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.