கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூரைச் சேர்ந்த 48 வயதுடைய வெண்ணிலா என்பவர், தான் நடத்தி வந்த பியூட்டி பார்லரில் டிரைவராக வேலை செய்த சிராஜுதினுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்தச் சமயத்தில், இருவரும் தனிமையில் இருந்த தருணங்களைச் சிராஜுதின், வெண்ணிலாவுக்குத் தெரியாமல் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்துள்ளார்.
வெண்ணிலாவுக்கு இரண்டாவதாகத் திருமணம் நடந்த பிறகு, சிராஜுதினுடனான பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு, அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் சிராஜுதின், வெண்ணிலாவை மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கத்தில், அவருடனான தனிமை வீடியோக்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
சிராஜுதினின் மிரட்டலால் பயந்துபோன வெண்ணிலா, தெரிந்தவர்கள் மூலம் அவரை அழைத்துச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், சிராஜுதின் பேரத்திற்கு ஒத்துவராததால், மனமுடைந்த வெண்ணிலா கடந்த நவம்பர் 4ஆம் தேதி வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெண்ணிலாவிடம் போலீசார் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் அனைத்தும் வெளிவந்தன. இதையடுத்து, வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில், மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற டிரைவர் சிராஜுதினைப் போச்சம்பள்ளி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
