குஜராத் மாநிலம் வதோதராவில் ஓராண்டு குழந்தைக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த எல்இடி பல்பு அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் மாவட்டம் மால்சர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயது சிறுவன் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தீவிர காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்தார்.
தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தபோது குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதாகக் கருதி அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் பெற்றோர் மிகுந்த கவலையில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வதோதராவில் உள்ள கோத்ரி அரசு மருத்துவமனைக்குக் குழந்தை அழைத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர்கள் குழந்தையைத் தீவிரமாகப் பரிசோதித்தபோது மூச்சுக்குழாயில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பதைக்கண்டறிந்தனர்.
உடனடியாகப் பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நவீன சிகிச்சையின் மூலம் அந்தப் பொருள் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது வெளியே வந்தது ஒரு சிறிய எல்இடி பல்பு என்பதைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது குழந்தை பூரண குணமடைந்து நலமுடன் இருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள் சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இது போன்ற சிறிய பொருட்களை கவனமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
