கனமழையால் பஞ்சாப் மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பல கிராமங்கள் நீரில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் கடந்த செவ்வாய்க்கிழமை ஃபெரோஸ்பூர் மாவட்டத்திலுள்ள கட்டி ராஜோ கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

மேலும் படகு மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, அங்கு நிலவும் சூழலை ஆய்வு செய்த அவர், மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

ஆய்வின்போது, ஒரு வயதான பெண்மணி தனது துயரங்களைப் பகிர்ந்து கையெடுத்து வணங்கியபோது, முதல்வர் பகவந்த் மான் உணர்ச்சிவசப்பட்டு தன்னை அறியாமல் கண்ணீர் வடித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஆராய்ந்து, ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் முழு இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார். மக்களின் துயரத்தில் பங்கெடுத்து, அவர்களுக்கு துணையாக நிற்கும் முதல்வரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.