பள்ளிக் கட்டணத்தை செலுத்த தேவையான பணம் இல்லாததால், ஒரு இளம்பெண் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜபல்பூரில் உள்ள ஜன்ஜீவன் நகர் பகுதியில், 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் இரும்புக் கம்பியை பயன்படுத்தி ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். முயற்சி தோல்வியடைந்ததும் அந்த இளம்பெண் அங்கிருந்து சென்று விட்டார்.
தொடர்ந்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
மேலும், இந்தச் செயலில் பிளஸ்-1 படிக்கும் மாணவன் ஒருவரும் தொடர்புடையவர் எனவும், அவரும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவன், கைது செய்யப்பட்ட பெண்ணின் தங்கை மகன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவனுக்காகவே இந்த இளம்பெண் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
