இன்ஸ்டாகிராம் வழியாக ஏற்பட்ட காதல் தொடர்பின் பின்னணி, கொலைக்கு வழிவகுத்தது. ஒரு இளைஞர், தன்னை ஏமாற்றியதாக கூறி, 52 வயது பெண்ணை கொன்று விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த அருண் (26) என்பவர், சமீபத்தில் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் “ராணி” என்ற பெயரில் உள்ள ஒரு பெண்ணுடன் அறிமுகமானார். தொடக்கத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு, காதலாகினர்.

ஆனால், உண்மையில் ராணி என்பவர் 52 வயதாகும் ஒரு மூத்த பெண் என்பது அருணுக்கு தெரியவில்லை. இளமையாகத் தோன்றும் புகைப்படங்களைப் பதிவேற்றிய ராணி, தனது வயதையும் குடும்ப நிலையையும் மறைத்து, பில்டர் செயலிகள் மூலம் அருணை ஈர்த்ததாக கூறப்படுகிறது.

கடந்த மாதங்களில் இருவரும் நேரில் சந்தித்து உறவிலுறந்தபோது, ராணியின் சில நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக அருண் தெரிவித்தார். விரைவில், அவளுக்கு ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இருப்பதும், உண்மையான வயதும் அருணுக்கு தெரிய வந்ததாம்.

தன்னை ஏமாற்றியதாகக் கருதிய அருண், தன் கோபத்தை வெளிக்காட்டாமல், ராணியிடம் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளார்.

பின்னர், ராணி அந்தத் தொகையை திருப்பி கேட்டு, அருணை திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, திருமணம் செய்வதாகக் கூறி, ராணியை நகரத்திற்கு வெளியே உள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற அருண், அங்கு தாவணியைப் பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை அருகே உள்ள பகுதியில் வீசியதாகக் கூறப்படுகிறது.

இது பற்றிய  புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ராணியின் உடலை மீட்டு, அருணை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.