இமாச்சலப் பிரதேசத்தின் பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், பாஜக எம்.பி. அனுராக் தாகூர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடம், “விண்வெளிக்கு முதலில் பயணித்தவர் யார்?” எனக் கேட்டபோது, மாணவர்கள் ஒருமித்து “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர்.

ஆனால், அனுராக் தாகூர், “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 1969ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாக விண்வெளிக்கு பயணித்தவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஆனால், அனுராக் தாகூரின் இந்தக் கூற்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பலத்த விமர்சனங்களை எழுப்பியது. திமுக எம்.பி. கனிமொழி மற்றும் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆகியோர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அனுராக் தாகூருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதிகாசங்களில் அனுமன் நிலவுக்கு சென்றதாக பதிவு உள்ளது. இதில் தவறு இல்லை. எதையும் குறை கூறுவது சரியல்ல.

அனுராக் தாகூர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இந்தியாவில் மெய்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்து பரிமாண வளர்ச்சியை அடைந்துள்ளது.

ராமர் பாலம் கண்டுபிடிக்கப்பட்டதைப் போல, மோடி அரசு விண்வெளித் துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. அனுராக் தாகூரின் பேச்சை விட, இந்த முன்னேற்றங்களைப் பாருங்கள்,” என தெரிவித்தார். இந்த விவகாரம் அரசியல் மற்றும் மத நம்பிக்கைகள் குறித்து பரவலான விவாதங்களைத் தூண்டியுள்ளது.