உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ஜெர்மன் நாட்டின் ஒரு நகரமே காலி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய தாக்குதலால், பல நாடுகள் இன்று சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடானது, எரிவாயு தேவைக்காக அதிகளவில் ரஷ்ய நாட்டையே நம்பியிருந்தது. இதனிடையே, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அந்நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை அறிவித்தது.

இதனால், பழிவாங்க நினைத்த ரஷ்யா, ஜெர்மன் நாட்டிற்கு அளித்துக் கொண்டிருந்த எரிவாயுவை நிறுத்திக் கொண்டது. ஜெர்மன் வேறு வழியின்றி ஆற்றல் தேவைகளை சமாளிக்க அனல் மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கு, நிலக்கரி தேவைப்பட்டதால் சுரங்கங்களை தோண்டும் பணியை மேற்கொள்கிறது.

அதன்படி, ஜெர்மன் நாட்டின் Lützerath என்ற கிராமத்தில் நிலத்திற்கு அடிப்பகுதியில் பழுப்பு நிலக்கரி இருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, அங்கு சுரங்கத்தை அமைத்து நிலக்கரியை எடுக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. எனினும், சுரங்கத்தை தோண்ட அந்த கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை இடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, அங்கிருந்த மக்கள், வீட்டை காலி செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நிலக்கரி  சுரங்கங்கள் அதிகம் தோண்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சமூக ஆர்வலர்கள் சுமார் 200 பேர் அங்கு போராட தொடங்கியுள்ளனர். எனவே,  காவல்துறையினர் உடனே அங்கிருந்து சமூக ஆர்வலர்கள் வெளியேறாவிடில் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார்கள்.