ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ரிசின், சயனைடு போன்ற நச்சுப் பொருட்களை வாங்கியிருந்தது அம்பலமானது.

ஈரானியரான அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து காவலில் வைத்தனர். அவரின் குடியிருப்பை சுற்றி வளைத்த காவல்துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நீதிபதியின் உத்தரவு படி நாங்கள் சோதனை மேற்கொண்டோம்.

அதில், அந்த நபர் தீவிரவாத தாக்குதலுக்கு தயாராகி வந்ததாக சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அவர் ரிசின், சயனைடு வைத்திருந்தது தாக்குதல் மேற்கொள்ளும் ஆபத்து இருப்பதை உறுதி செய்தது. அந்த குற்றவாளியுடன் வேறொரு நபரும் கைதாகியுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.