காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை கண்டனப் போராட்டம் நடைபெற்றது. 2023 அக்டோபர் முதல் தொடங்கிய இந்தப் போரில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் பீரங்கிகளுடன் தரைவழித் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஐ.நா. இதனை இனப்படுகொலையாகக் கண்டித்துள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் காசா மக்களின் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னைப் போராட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

போராட்டத்தில் உரையாற்றிய நடிகர் பிரகாஷ் ராஜ், காசாவில் நடக்கும் வன்முறைக்கு இஸ்ரேல் மட்டுமல்ல, அதற்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவும், மவுனம் காக்கும் பிரதமர் மோடியும் காரணம் எனக் கடுமையாக விமர்சித்தார்.

“அநியாயத்துக்கு எதிராகப் பேசுவது அரசியல் என்றால், நாங்கள் அரசியல் பேசுவோம். மவுனமாக இருந்தால் பாதிப்புகள் பன்மடங்காகும். ஒரு கவிஞன் சொன்னது போல், என் கவிதைகளில் அரசியல் வேண்டாம் என்றால், பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும்.

ஆனால், யுத்த விமானங்களின் சத்தம் அடங்கினால் மட்டுமே பறவைகளின் குரல் கேட்கும். ஒரு மனிதனின் காயம் மவுனத்தில் குணமாகலாம், ஆனால் ஒரு நாட்டு மக்களின் காயத்துக்கு மவுனம் விடையல்ல. எனவே, வன்முறைக்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்,” என உருக்கமாகப் பேசினார்.