2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகத்தில் முக்கிய கட்சி தலைவர்கள் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய், தனது முதற்கட்ட பிரசாரத்தை திருச்சியில் கடந்த வாரம் (செப்.13) சனிக்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து அரியலூரிலும் பிரசாரம் மேற்கொண்டார்.

ஆனால், பெரம்பலூர் பயணத்தை அவர் திடீரென ஒத்திவைத்திருந்தார். இதையடுத்து, இந்த வாரம் இரண்டாவது கட்டமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

பிரசார மேடைகளில் பேசும் விஜய், மத்திய பாஜக அரசையும், தமிழக திமுக அரசையும் கடுமையாக விமர்சிக்கிறார். மேலும், 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் மட்டுமே போட்டி இருக்கும் என தெரிவிக்கிறார்.

இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக விமர்சித்து வருவதும் அமைச்சர்களை பதிலடி கொடுக்கச் செய்தது. ஆனால், ஒவ்வொரு அமைச்சரும் வெவ்வேறு பதில்களை அளித்ததால், திமுக தலைமையில் குழப்பம் ஏற்பட்டது.

இதனால், திமுகவின் உள் முடிவின்படி, இனி விஜயை விமர்சித்து அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது நேரடியாக கட்சி தலைமை மூலமாகவே வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது, திமுக அமைச்சர்கள் அனைவரும், தனது 4 ஆண்டு சாதனைகளை மட்டுமே மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விஜய் குறித்து தற்போது யாரும் பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.