அயர்லாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்து, வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ள விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்திய அணியின் இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை ஐஸ்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் (Iceland Cricket) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மிகக் கொடூரமாக நக்கல் செய்து பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில், “கௌதம் கம்பீரை எங்கள் அணியின் கோச்சிங் ஸ்டாப்பாக சேர்க்க எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
ஆனால், அவரிடம் அசாத்திய திறமை இருக்கிறது. இந்திய வீரர்களை வைத்துக் கொண்டு, அயர்லாந்தில் இப்படி ஒரு ரிசல்ட்டை கொடுப்பதற்கு தனித் திறமை வேண்டும்” என்று பயங்கர காரசாரமாக கலாய்த்துள்ளனர். இந்த நக்கல் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி, கம்பீரின் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் 155 ரன்கள் என்ற இலக்கை துரத்த முடியாமல் 1 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்று தொடரை இழந்தது.
இப்போட்டியில் அயர்லாந்து பந்துவீச்சாளர் ஜெய முந்த்ரா வீசிய முதல் ஓவரிலேயே சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரையும் டக் அவுட் செய்து அதிரடி காட்டினார். அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அவுட் ஆக, இந்தியா 3 ஓவர்களில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. திலக் வர்மாவின் அரைசதமும், ஹர்ஷித் ராணாவின் கடைசி நிமிட போராட்டமும் அணியை முழுமையாகக் காப்பாற்ற முடியவில்லை.
We can confirm that we don't wish to add Gautam Gambhir to our coaching staff. He clearly has talent, though. To take those Indian players and deliver those results in Ireland takes truly remarkable gifts.
— Iceland Cricket (@icelandcricket) June 28, 2026
இந்தத் தோல்வி ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலோடு எதிர்பார்த்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த குறுகிய தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு தராதது ஏன் என்று கம்பீர் மற்றும் இந்திய அணி மேலாண்மை மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி சந்திக்கும் முதல் டி-20 தொடர் தோல்வி இது என்பதால், கௌதம் கம்பீரின் பயிற்சி மற்றும் திட்டமிடல் குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அயர்லாந்து அணி இந்த வரலாற்று வெற்றியைத் தங்களது கிரிக்கெட் வரலாற்றின் மைல்கல்லாகக் கொண்டாடி வரும் வேளையில், இந்திய அணிக்கு இத்தொடர் மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
