இந்திய தேர்தல் ஆணையம் விதிமுறைகளை மீறிய கட்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 334 கட்சிகள் கடந்த மாதம் 9ஆம் தேதி நீக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 22 கட்சிகள் அடங்குகின்றன. தற்போது, இரண்டாவது கட்டமாக, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறிய 474 கட்சிகள் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் இருந்து 42 கட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால், ஒருங்கிணைந்த எண்ணிக்கையில் தமிழ்நாட்டை சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், மூன்றாவது கட்டமாக 2021 நிதியாண்டிலிருந்து கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலிலும் தமிழகத்தை சேர்ந்த 39 கட்சிகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக பங்கேற்காததும், நிதி அறிக்கைகள் தாக்கல் செய்யாததும் உள்ளிட்ட விதிமீறல்களால் இந்த கட்சிகளின் அங்கீகாரம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் தற்போது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,046 ஆக குறைந்துள்ளது.

அரசியல் கட்சிகள் மீது இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகள், நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.