பண்ருட்டியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், 2016-2021 காலகட்டத்தில் பண்ருட்டி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது திடீரென மயக்கம் அடைந்த சத்யா பன்னீர்செல்வத்தை உடனடியாக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை, சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் மீது பதிவு செய்யப்பட்ட பண மோசடி மற்றும் டெண்டர் முறைகேடு வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகிறது.

கடந்த 2024 பிப்ரவரியிலும், இதே வழக்கில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. 2011 முதல் 2016 வரை பண்ருட்டி நகர மன்ற உறுப்பினராக இருந்த பன்னீர்செல்வம், நகராட்சி தலைவராக இருந்தபோது ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக இன்று மீண்டும் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பறிமுதல் பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும், சோதனை முடிவில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.