மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் கார் பறிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து பணிக்கு சென்ற நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் எஸ்.பி தான் என்றும் தான் நேர்மையாக இருப்பதால் இவ்வாறு பிரச்சனை செய்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
அதாவது அவருடைய வாகனத்தை எஸ்பி விஐபி வாகன பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு அவருக்கு பழைய வாகனத்தை கொடுத்ததால் அது வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு அவர் வீட்டில் இருந்தே நடந்து சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை எஸ்பி அலுவலகம் மறுத்தது.
இதைத்தொடர்ந்து டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி கொடுத்தபோது தான் நேர்மையாக செயல்படுவதால் தனக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுப்பதோடு மனரீதியாக சித்திரவதை செய்கிறார்கள். நான் இவ்வாறு பேட்டி கொடுப்பதால் என்னை சஸ்பெண்ட் செய்வார்கள் என்பது எனக்கு நன்றாக தெரிந்தும் தான் பேட்டி கொடுக்கிறேன் என்றார். இந்த பேட்டிக்கு பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுந்தரேசன் வீட்டில் இருந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
