மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி, மேற்கு புறநகர் ரெயில்களில் நிகழ்ந்த 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பில் 189 பேர் உயிரிழந்து, 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 2015-ல் 12 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது. இதில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் மேல் முறையீடு செய்தனர். அதே நேரத்தில், மரணதண்டனையை உறுதி செய்யும் வகையில் மகாராஷ்டிர அரசு மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வந்தது. நேற்று காலை, நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் அடங்கிய சிறப்பு அமர்வு, வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, 12 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தெரிவித்ததாவது, “அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என நிரூபிக்க போதுமானதாக இல்லை. அவர்கள் செய்திருக்கிறார்கள் என நம்புவதற்கே தன்மையான ஆதாரங்கள் இல்லை.
எனவே, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை இரண்டும் ரத்து செய்யப்படுகின்றது” எனத் தெரிவித்தனர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 12 பேரையும் விடுதலை செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
