தமிழகத்தில் நில மோசடிகள் மற்றும் போலிப் பத்திரப் பதிவுகளைத் தடுக்கும் நோக்கில், சொத்துப் பதிவின் போது ‘அசல் ஆவணங்களைச்’ சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கித் தமிழக அரசு புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் அசல் ஆவணங்கள் இன்றிப் பத்திரப் பதிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்களைத் தவிர்க்கப் பதிவுத்துறை சில விதிகளை வகுத்திருந்தது. ஆனால், அவை சட்டப்பூர்வமாக இல்லாததால் உச்சநீதிமன்றம் அந்த விதிகளை ரத்து செய்தது. இதையடுத்து, தமிழக அரசு பதிவுச் சட்டத்தில் உரியத் திருத்தங்களைக் கொண்டு வந்து சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது.

இந்த மசோதாவிற்குச் சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது தமிழக அரசு இதனை அரசாணையாக வெளியிட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, சொத்து தொடர்பான ஆவணங்களைப் பதிவு செய்யும்போது பின்வரும் நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன:

 சொத்தின் உரிமையைக் காட்டும் முந்தைய அசல் ‘மூல ஆவணம்’ (Parent Document) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பதிவு செய்ய முன்வைக்கப்படும் தேதிக்கு முன் 10 நாட்களுக்குள் பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழை இணைக்க வேண்டும்.

ஒரு சொத்து குறித்து ஏற்கனவே விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதன் காலக்கெடு முடிவடையாமல் இருந்தால், அந்தச் சொத்தை வேறு ஒருவருக்குப் பதிவு செய்யப் பதிவு அதிகாரி மறுக்க வேண்டும்.

அசல் ஆவணம் இல்லாத சில குறிப்பிட்ட சூழல்களுக்கு மட்டும் புதிய சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது: அதன்படி மூல ஆவணம் இல்லாத பூர்வீகச் சொத்தாக இருந்தால், வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட பட்டா நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால், காவல்துறை வழங்கிய ‘கண்டறிய முடியாத சான்றிதழ்’ (Non-Traceable Certificate) மற்றும் அது குறித்து நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பர நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானதாரர் வழங்கும் தடையற்றச் சான்றிதழ் (NOC) கட்டாயம். அரசு வழங்கும் ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில குறிப்பிட்ட ஆவணங்களுக்கு மூல ஆவணத்தைச் சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு உண்டு. மேலும் இந்த அதிரடிச் சட்டத் திருத்தம் மூலம் இனி முறைகேடாகச் சொத்துகளைப் பதிவு செய்வது முற்றிலும் தடுக்கப்படும் எனப் பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.