தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

முகாமின்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டிகள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான மருந்துப்பெட்டிகள் ஆகியவை அமைச்சர்களால் வழங்கப்பட்டன.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:  “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், மக்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். பரிசோதனையின் முடிவுகள், அதே நாளே மாலை நேரத்துக்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இத்திட்டம் மூலம் இதுவரை 4,63,781 பேர் பயன்பெற்றுள்ளனர்,” என்றார்.

மேலும், காஞ்சீபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்தி, வடமாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறியதாவது: “இந்த சம்பவம் தொடர்பாக, மருந்து கட்டுப்பாட்டு அலுவலரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மருந்தின் உற்பத்தி தேதி, காலாவதி தேதி, விற்பனை செய்யப்பட்ட நாட்கள், பயன்படுத்திய இடங்கள், மருந்து காலாவதியானதா? போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம்.”

“தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்து விற்பனையாகிறதா? என்பதைப்பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. ‘கோல்ட்ரிப்’ எனும் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படுகிறது,” என்றும் தெரிவித்தார்.