தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (அ.தி.மு.க.) சேர்ந்தவருமான ஐ. எஸ். இன்பதுரை, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து ஆறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ள ஆலோசனைக்குழுவில், கல்வித்துறையின் வளர்ச்சி, புதிய திட்டங்கள், தேசியக் கல்விக் கொள்கையின் முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களில் ஆலோசனை வழங்கும் வகையில், இன்பதுரை எம்.பி. உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கான உத்தரவு, நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் கல்வித் துறையின் தொடர்புடைய பிரிவுகளுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு உறுப்பினருக்கு இடம் அளிக்கப்பட்டிருப்பது, மாநிலத்திற்கும் அ.தி.மு.க.விற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக உள்ளதாக அந்தக் கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.