அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்தினார். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் கூட்டம் நடைப்பெற்றது.

அதிமுக ஆட்சியில் திருச்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹1000 கோடி நிதி வழங்கப்பட்டு, பலவிதமான மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டது என அவர் கூறினார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சாரம், வரி, கட்டுமானப் பொருட்கள் அனைத்திலும் விலை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் குப்பைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றார். அதிமுக ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்ததையும், விலை கட்டுப்பாட்டுக்காக ₹100 கோடி நிதி ஒதுக்கப்பட்டதும் நினைவுபடுத்தினார்.

கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, பல கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டதையும் அவர் விளக்கினார்.

மேலும், ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம், லேப்டாப் திட்டம், அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாகக் கூறினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த அனைத்து திட்டங்களும் தொடரும் என்றும், புதிய திட்டங்கள் அறிமுகமாகும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

புதிதாக திருமணமாகும் தம்பதியினருக்கு ரூ.50,000 ரொக்க பணமும் பட்டு வேஷ்டி செயலையும் வழங்கப்படும். கொரோனா காலத்தில் அரசு வழங்கிய சேவைகளை நினைவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, தீபாவளி சேலை, வீடு கட்ட உதவித் தொகை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.75000 மானியம் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொண்டு மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்றார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு வழங்கிய நன்மைகள், பாதுகாப்பு குறித்து பேசிய அவர், மத, ஜாதி கலவரமில்லாத அரசாக அதிமுக அரசு இருந்ததைச் சுட்டிக்காட்டினார். திருச்சி மாநகரில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகள், பூங்காக்கள், கால்வாய் மேம்பாடுகள், பேருந்து நிலையம் மேம்பாடு, மணிமண்டபங்கள் உள்ளிட்டவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்றும், தற்போதைய திமுக ஆட்சியினர் அதில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் வேலை மட்டும் செய்ததாக குற்றம் சாட்டினார். “பைபை ஸ்டாலின்” என உரையை முடித்த எடப்பாடி பழனிசாமி, திருச்சி மக்களுக்கு அதிமுகவின் வெற்றிக்காக வாக்குக் கோரினார்.