அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்கள் பெங்களூரு புகழேந்தி, மருது அழகுராஜா உள்ளிட்டோர், தற்போது நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-க்கு அடுத்தபடியாக விஜய்தான் மாற்றாக வருகிறார் என்ற குரல்கள், அந்தமட்டத்தில் அரசியல் சூழலை மாற்றக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், EPS கட்சியில் மீண்டும் இணைப்பு என்ற வார்த்தையே கிடையாது என திட்டவட்டமாகத் தெரிவித்ததற்குப் பிறகுதான், இந்த தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக நேரடியாகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், EPS தலைமையிலான அதிமுகவுக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் அந்தத் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபடலாம் என கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அரசியலில் தங்களை நிரூபிக்க விரும்பும் இத்தலைவர்கள், விஜயின் வளர்ச்சியைக் கண்டதும் அவரது போக்கிற்கு ஏற்று பக்கபலமாக நிற்க தயாராகிவிட்டனர் என கூறப்படுகிறது. இதனையடுத்து, கொங்கு மண்டலத்தில் நிலவிய அதிமுக ஆதிக்கத்தில் விரிசல் ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.
