பாகிஸ்தான் கடுமையான மழையால் தத்தளித்து வரும் நிலையில், தாவி ஆற்றில் வெள்ள அபாயம் இருப்பதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல், இந்திய உயர் தூதரகத்தின் மூலம் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பஹல்‌காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இருநாடுகளுக்கும் இடையே தடைபட்டிருந்த தகவல் பரிமாற்றத்துக்குப் பிறகு, முதன்முறையாக நடந்த சம்பவம் என்பதாலேயே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் கையெழுத்தான இந்தஸ் நீர்வள ஒப்பந்தம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே நீர் பகிர்வை ஒழுங்குப்படுத்தியது. ஆனால், 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்‌காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடுமையான எதிர்வினை காட்டி, பாகிஸ்தானுடன் நீர் தரவுகளை பகிர்வதை நிறுத்திவிட்டது. இதனால், பாகிஸ்தான் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை விட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், தாவி ஆற்றில் வெள்ள அபாயம் இருப்பதற்கான இந்தியாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையம்  பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில், ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 20 வரை நடந்த கனமழையால் 788 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 200 குழந்தைகள், 117 பெண்கள், 471 ஆண்கள் என புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30 வரை பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள அபாயம் தொடரும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில், ஜல் சக்தி துறை அமைச்சர் ஜாவேத் அக்மத் ராணா, தாவி, ஜெலம், ரவி ஆறுகளின் நீர்மட்டங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளை உத்தரவு அளித்துள்ளார். மேலும், குடிமக்கள் ஆறுகளுக்கு அருகே செல்ல வேண்டாம், மலைச்சரிவுகள் ஏற்படும் இடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற வகையில் அவசர அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவுகள் கடுமையான பதற்றத்தில் இருந்து இயல்புக்குத் திரும்பும் முன்னேற்றமான புள்ளியாக இந்த நீர் தகவல் பரிமாற்றம் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கான மனிதாபிமான முன்னெச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் விவாத வாயிலாக நீர்வள ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் எழுகிறது.